தமிழில், கலாப்பூர்வமாக சினிமாவை அணுகும், ஆராயும் சிறப்பான புத்தகங்கள் ஏராளமாக உண்டெனினும், தொழில்நுட்பப் பகிர்வுகள் என்று பார்த்தால் நம்மிடம் பதிலில்லைதான். ஆங்கிலப் புத்தகங்களையும், இணைய உதவியினையும், அதுவும் தேர்ந்த ஆங்கிலப் புலமை கொண்டோர்தான் அணுகமுடியும். அவ்வாறான புத்தகங்கள் தமிழில் காணக்கிடைப்பது இன்னும் அரிதாகவே இருக்கிறது. ஆக, அவ்வாறான தொழில்நுட்பக் கட்டுரைகளைத் தமிழில் எழுதிக் குவித்து, தமிழின் மீதிருக்கும் பெரும்கறையைத் துடைத்தெறிவதுதான் என் நோக்கம் என யாரும் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்! ஒரு சினிமா ஆர்வலனாக, தொழில்நுட்ப வல்லுனராக, ஒளிப்பதிவாளனாக என் வாசிப்பிலிருந்தும், அனுபவத்திலிருந்தும் நான் தெரிந்துகொண்ட செய்திகளின் ஒரு சிறிய அறிமுகப்பகிர்வுதான் இந்த நூல்! பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள இந்நூல் முயன்றாலும் முதன்மையான நோக்கம் என்பது ஒளிப்பதிவு மட்டுமே! ஃபிலிம் நுட்பத்துக்கும், டிஜிடல் நுட்பத்துக்குமான வேறுபாடுகள், சாதக பாதகங்கள், கருவிகள், அவை இயங்கும் முறைகள், ஒளிப்பதிவு நுட்பங்கள் எனப் பல விஷயங்களை இக்கட்டுரைகளில் பேச முயன்றிருக்கிறேன்.
ஒரு இனமென்றால் அதற்கென்று தனியாக உணர்வுகளும், குணங்களும் உண்டு. அதற்கு எப்போதும் சுதந்திரமாக வாழ வேட்கையும், உரிமையும் உண்டு. அச்சுதந்திரத்திற்காகவே இங்கே பல இனங்களுக்குள் போர்கள் நடந்துள்ளன. நாடு கடந்து, தேசம் கடந்து, கண்டம் கடந்து மனிதக் கூட்டம் அழிக்கப்பட்டிருக்கிறது. பல இனங்கள் விடுதலைக்காகப் போராடியிருக்கின்றன. இதில் நிகழ்ந்த தோல்விகளையும், வெற்றிகளையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. எழுத்தாக, ஓவியமாக, இலக்கியமாக, பாடலாக, நடனமாக, நாடகமாகப் பதிவு செய்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களிலும் இத்தகைய வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வாழ்ந்து/ போராடி/ வென்ற/ மறைந்த மாமனிதர்கள், அப்பாவி மனிதர்கள் திரைப்படங்களில் இரத்தமும் சதையுமாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய திரைப்படங்கள் சிலவற்றை அறிமுகம் செய்வதே இப்புத்தகத்தின் நோக்கம்.
‘வரலாறு படித்தவர்கள், வரலாற்றில் படித்தவர்களுக்குக்கான’ புத்தகம் இது.
கடந்ததும் கற்றதும்
இவ்வாண்டு (2017) புத்தக சந்தைக்கு, என்னுடைய மூன்றாவது புத்தகம் ‘ஒளிப்பதிவாளனோடு ஒரு பயணம்’ நூல் , தமிழ் ஸ்டியோ திரு.அருண் முயற்சியால் வெளியாகி இருக்கிறது. இந்நூலில், ஒரு ஒளிப்பதிவாளனுக்கு அறிமுகமாகி இருக்க வேண்டிய, ஓவியம், காமிக்ஸ், இசை, திரைப்படங்கள், புகைப்படங்கள் குறித்த ரசனை பற்றி பேசி இருக்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்களை மட்டுமல்லாது, பொது வாசகனையும் இப்புத்தகம் கவரும் என்று நம்புகிறேன்.
இம்மாதம் நடந்த ‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்’ தமிழ் வலைத்தள துவக்க விழாவில், திரு.கமல்ஹாசன், திரு.பாரதிராஜா, திரு.வைரமுத்து ஆகியோர்க்கு அதை அன்பளிப்பாக வழங்கினோம். அவர்கள் அதை மேடையில் வெளியிட்டார்கள்.
நாம் நேசிக்கும், மதிக்கும் நமது ஆசான்களின் கைகளில் நமது படைப்பு இருப்பதை பார்க்கும்போது மனதெங்கும் பரவசமும், நன்றியும் பொங்குகிறது. அதற்கு காரணமான, திரு.பி.சி.ஶ்ரீராம், திரு.B.கண்ணன், திரு.ராஜீவ் மேனன், திரு.இளவரசு மற்றும் எங்கள் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரு.அருண் ஆகியோருக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
Books (Print Edition) Available in..
Pure Cinema
No. 7, West Sivan Kovil Street, Vadapalani,
Chennai - 600026.
Tamilnadu, India.
(opposite to Vikram Studio, Near Vasan Eye Care)
Mail: [email protected]
Tel:044 42164630
Mobile: 9840698236
SHARE THIS PAGE!